பொறியியல் படிப்புக்கான கல்வி கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை..!!

சென்னை: பொறியியல் படிப்புக்கான கல்வி கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் கட்டண நிர்ணய குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 25 சதவீதம் அளவிற்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 530க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கக்கூடிய கட்டணத்தின் மதிப்பானது நிர்ணயம் செய்யப்படும். இதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த குழுவிற்கு ஓய்வுப்பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைவராகியுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த குழுவிற்கு ஓய்வுப்பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் இருந்தார். அப்போது தனியார் கல்லூரிகளுக்கு 45 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை என்று அந்த கல்லூரிகளின் தரம் மற்றும் அக்கல்லூரிகளின் செலவீனங்கள், உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு கல்லூரிகளுக்கான கட்டணம் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரக்கூடிய 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யலாம் என்று கட்டண நிர்ணய குழு அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.

அதாவது கல்லூரிகளில் ஆகக்கூடிய செலவீனங்கள், போராசிரியர்களுக்கு வழங்கக்கூடிய செலவீனங்கள், உட்கட்டமைப்பு அதேபோல மேம்படுத்துதல் செலவுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தற்போது அதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் குறைந்தபட்சமாக 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நிர்ணயக்குழுவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்படும். அதன்பின்னர் கட்டாய நிர்ணய குழுவானது எந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு கட்டணத்தை கூடுதலாக நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பாக ஒரு இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: