கபினி, கே.எஸ்.ஆர். அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 51,000 கனஅடி நீர் தமிழகம் வந்தடைந்தது..!!

சேலம்: கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதாலும் கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதாலும் அங்குள்ள கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.  இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 2 தினங்களாக 30 ஆயிரம் கனஅடியாகும் நேற்று 40 ஆயிரம்  கனஅடியாகும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்றைய நிலவரப்படி கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 51 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது. தமிழகம் - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று மாலைக்குள் ஒகேனக்களுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒகேனக்களுக்கு வந்தடையும் தண்ணீர் 5 மணி நேரத்தில் மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒகேனக்களுக்கு அதிகப்படியாக 3 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்தடைந்தது. தொடர்ந்து அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் காவிரி கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: