குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னை: குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு , களத்தில் நின்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்,  சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பாண்டி முனி(53), கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட்டார்.

இதையடுத்து, அவர் நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டி முனி இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பொழிச்சலூர் பகுதியில் வசித்து வந்த இவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். 1986ல் காவல் பணியில் சேர்ந்து தற்போது T13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், சேது பாண்டி (32) மகனும், சுதா(29) என்ற மகளும் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: