ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மீண்டும் தொடக்கம்: கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாட்டினம் பிளஸ் வசதி

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டம் மீண்டும் செயல்பட துவங்கியது. பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய பரிசோதனை முறை கொரோனா பாதித்தவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் தோட்டம் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 2018ம் ஆண்டு முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 20 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலால் 4 மாதங்களாக இந்த வசதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் இத்திட்டம் தொடங்கியுள்ளது.

மேலும் பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நுரையீரல் சார்ந்த பரிசோதனை, விரிவான கண் பரிசோதனை, பார்வை குறைபாடு பரிசோதனை, கண் நரம்பு பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் ரூ. 4 ஆயிரம் கட்டணத்தில் செய்யப்படுகிறது. இது கொரோனா பாதித்தவர்களுக்கு பெரிதும் உதவும். இதற்கு முன்பாக கோல்ட், டைமண்ட், பிளாட்டினம் என 3 நிலைகளாக பரிசோதனை செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிளாட்டினம் பிளஸ் பிரிவில் பிளாட்டினம் பிரிவில் உள்ள சோதனைகளுடன் புதிதாக சில பரிசோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காலத்தில் பல்வேறு இணைநோய்களுடன் இருப்பவர்கள் தங்களது உடலில் உள்ள பிரச்னைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றது போல் சிகிச்சை மேற்கொள்ள இந்த பிளாட்டினம் பிளஸ் பிரிவு உதவியாக இருக்கும்.

Related Stories: