8 வழி சாலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரம்: சேலத்தில் விளைநிலங்களில் மண்டியிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

சேலம்: வேளாண் நிலங்களை தங்களுக்கே விட்டுக்கொடுக்க வலியுறுத்தி விளைநிலங்களில் மண்டியிட்டு கையேந்தும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 8 வழி சாலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10திற்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆச்சாங்குட்டப்பட்டி அருகே உள்ள அடிமலைபுதூரில் உண்ணாமலை அம்மாள் என்ற விவசாயியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளும் மண்டியிட்டு கையேந்தி நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதேபோல பாரப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் ஆடு, கோழி மற்றும் மாடுகளுடன் ஏர் கலப்பையை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்ததாவது, சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்யாமல் இயற்கை வளங்களை அழித்து சாலை அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் குறியாக உள்ளனர். இந்த 8 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தான் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்தனர்.

சேலம் - சென்னை இடையிலான 8 வழி சாலை தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: