கோயம்பேடு உள்பட அனைத்து மார்க்கெட் திறக்க கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம்தேதி காய்கறி, பழம், பூ மார்க்கெட் அடைப்பு: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இதில் கோயம்பேடு காய்கறி வணிக வளாக சந்தை கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்ளிட்ட 38 மார்க்கெட் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு வருகிற 10ம் தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தை திறப்பதற்கு உரிய நடவடிக்கையை துரிதப்படுத்தி, 24 மணி நேரமும் சுதந்திரமாக இயங்கிட அனுமதி அளிக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்த்திட வணிக வளாக சுற்றுப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்.

வாரத்திற்கு ஒருமுறை வணிக வளாகத்திற்கு கட்டாய விடுமுறை அளித்து சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க வேண்டும். திறக்க நடவடிக்கை எடுக்காவிடில், முதல் கட்டப் போராட்டமாக வருகிற 10ம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம் மார்க்கெட் மற்றும் கடைகள் அனைத்தும் கோயம்பேடு வணிக வளாகம் திறப்பதற்கு ஆதரவாக, ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். ஒருவேளை தீர்வு காணாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: