வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக்குவதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றத்தில் வரும் 7ம் தேதி விசாரணை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டன் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை அவரது நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அவரது அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்,  ஜெயலலிதாவின் சட்ட பூர்வ வாரிசான எங்களை கேட்காமல் சென்னை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்திற்கும் நாங்கள்தான் உரிமை கோர முடியும். எனது மூதாதையர்களின் சொத்துக்களை குறிப்பாக நகைகள், உடைகள் பெண்களின் உடமைகளை அரசு எடுப்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலாகும். ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா நிலையத்தை மாற்ற தமிழக மக்கள் விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான, சட்ட பூர்வ வாரிசுகளான நாங்கள் அரசின் முடிவுக்கு அனுமதிக்க மாட்டோம். எனவே, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றும் தென் சென்னை டிஆர்ஓவின் ஜூலை 22ம் தேதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: