காவிரியாற்றில் கிடந்த சாக்கு மூட்டையில் ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் காவிரி ஆற்றின் வடகரையில் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சரசுவதி(45) என்பவர் படித்துறை வழியாக இறங்கி குளித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் காலில் சாக்கு மூட்டை ஒன்று தட்டுப்பட்டது. இதையடுத்து அதை வெளியே எடுத்தார். உள்ளே உலோகப்பொருட்கள் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். பொதுமக்கள் சென்று அந்த பையை எடுத்துச்சென்று மாரியம்மன் கோயிலில் வைத்து பிரித்து பார்த்தனர். அதில் சாமி சிலைகள் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் எஸ்ஐ மகாதேவன், விஏஓ குருபிரசாத் ஆகியோர் சென்று சிலைகளை கைப்பற்றினர். விசாரித்ததில் 2 பெருமாள் சிலைகள், 2 தாயார் சிலைகள், காளியம்மன் சிலை, அன்னபூரணி, சந்தானகோபாலன் சிலை, 3 திரிசூலம், ஒரு பெரிய அரிவாள், தாலி மற்றும் தாம்பாளம் உட்பட 18 பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அனைத்தும் ஐம்பொன் சிலைகளா, தங்க சிலைகளா என்று சோதனை செய்யப்பட உள்ளது. சிலைகள் அனைத்தையும் கைப்பற்றி மயிலாடுதுறை காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இவைகள் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பிறகு முடிவெடுக்கப்படும். சிலை குறித்து தொல்லியல் நிபுணர்களிடம் கேட்டு அதன் மதிப்பு அறியப்படும். மேலும் ஒட்டுமொத்தமாக சுமார் 4 கிலோ எடை உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

Related Stories: