மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், உடல் ஆரோக்யம் கெடுவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தற்போதைய சூழ்நிலைக்கு ஆன்லைன் கல்வி மட்டுமே கைகொடுக்கும் என்றும், மாணவர்களின் நலன்களை காக்கும் விதமாக வழிகட்டு முறைகளை அரசு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதன்படி, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

வீட்டுக்கல்வி என்ற முறையில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, முதலமைச்சர் இன்று முக்கிய முடிவெடுப்பார். அதுமட்டுமல்லாது, 100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: