ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி வீடியோ கான்பரன்சில் வழக்கு விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 31ம் தேதி வரை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனாவால் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நீதிமன்றங்களில் சமூக இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. நேரடி விசாரணை இல்லை. இதனால் வக்கீல்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பார்கவுன்சில், வக்கீல்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், நீதிமன்ற பணியாளர்கள் பலர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானதால் வக்கீல்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்றம், மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் விசாரணை நடைபெறும். மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த நிலை தொடரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: