இயக்குபவர்களின் பின்புலம் விசாரிக்கப்படும் டிரோன்கள் இயக்க கடும் கட்டுப்பாடு: கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கண்காணிப்பு

புதுடெல்லி: டிரோன்களை இயக்குவதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல் விதிமுறைகளை விமான பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஆளில்லா விமானமான டிரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்ச்சிகளுக்கான வீடியோ கவரேஜில் இருந்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது வரை விதவிதமான டிரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், டிரோன்கள் மூலம் எளிதாக நாச வேலைகளை செய்துவிடலாம் என்பதால் அதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக்கி வருகிறது. அந்த வகையில், டிரோன்களை இயக்குவதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை விமான பாதுகாப்பு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சைபர் பாதுகாப்பு, சேமிப்பு வசதிகள், பயிற்சி என பல அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம் வருமாறு:

1 டிரோனை இயக்கக் கூடிய கட்டுப்பாட்டு மையம் ஒரு சிறிய விமானி அறையை போல் அமைக்கப்பட வேண்டும்.

2 அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, காட்சிகள் சேமிக்கும் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3 சிறு, குறு டிரோன்களைத் தவிர மற்ற அனைத்திலும், குறைந்தபட்சம் 30 நாட்கள் வரை காட்சிகளை சேமித்து வைக்கக் கூடிய கேமராக்கள் இடம் பெற வேண்டும்.

4 டிரோனை இயக்கும் கட்டுப்பாட்டு மையம், நாசவேலைகள் மட்டும் சட்டவிரோத செயல்களை செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும்.

5 டிரோன்கள் தாமாக காட்சிகளை பதிவு செய்யவும், பறக்கும் நிலையிலும் இருக்க வேண்டும். இது சேதப்படுத்துதலை தடுக்கும். நாசவேலைக்கான முயற்சிகளை கண்டறிய உதவும்.

6 டிரோன் இயக்குபவர் மற்றும் பிற பணியாளர்கள், ஆன்லைனில் ஒருநாள் விமான பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியை எடுப்பது அவசியம்.

7 டிரோன் இயக்குபவர்களின் பின்புலம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

8 டிரோன்கள் இயக்குகையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கும், விமான பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

9 டிரோன்கள் இயக்குபவர்கள் உள்ளூர் நிர்வாகத்திடமும், விமான போக்குவரத்து இயக்குனரகத்திடமும் முறையான அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: