மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா: தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கும் தொற்று; உ.பி.யில் பா.ஜனதா பெண் அமைச்சர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதித்த உத்தரபிரதேச மாநில பாஜ பெண் அமைச்சர் கமல் ராணி வருண் சிகிச்சை பலனின்றி பலியானார். ஒரே நாளில் நடந்திருக்கும் இந்த 3 சம்பவங்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 54,735 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தேசிய ஊடரங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இதுவரை சாமானியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என எந்த தரப்பையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையையும் கொரோனா பதம் பார்த்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நேற்று அவரது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறி எனக்கு தென்பட்டது. அதை தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது என் உடல்நிலை சீராக உள்ளது, இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்’’ என்று கூறி உள்ளார்.

மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக அமித்ஷாவுக்கு கொரோனா பாதித்த நிலையில், மாநில அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவமும் நேற்று நடந்தது. உத்தரபிரதேச மாநில தொழிற்கல்வி அமைச்சர் கமல் ராணி வருண் கொரோனா பாதிப்பினால் நேற்று உயிரிழந்தார். கடந்த மாதம் 18ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம், பல உறுப்புகள் செயலிழந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தார்.

தமிழக ஆளுநருக்கு கொரோனா: இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை 10.45 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் (81), தனது காரில் கிண்டியில் இருந்து ஆழ்வார்பேட்டைக்கு வந்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் வாகனங்களில் வந்தனர். கவர்னரின் காரில் ஏசி போடவில்லை. அவரது இருக்கை அருகே கார் கண்ணாடி கீழே இறக்கி விடப்பட்டிருந்தது. பின்னர், ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை 2வது மாடியில் பன்வாரிலால் புரோகித்துக்கு டாக்டர்கள் உடல் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிந்ததும், அங்குள்ள 4வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கவர்னர் சிகிச்சை பெறுவதையொட்டி, மருத்துவமனை வளாகத்தை சுற்றி சுமார் 50 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பரிசோதனை முடிவில் கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், நேற்று மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டது. லேசான பாதிப்பு மட்டும் அவருக்கு உள்ளது. தொடர்ந்து அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் பணியாற்றிய அவரது நேர்முக உதவியாளர் உட்பட 87 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புராகித்துக்கு நேற்று பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கொரோனா, உபி பெண் அமைச்சர் பலி ஆகிய தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா பீதியை ஏற்படுத்தி உள்ளது.

* விரைவில் நலம்பெற வாழ்த்து

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவரை நேரில் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக நேற்று அறிவித்தார். தற்போது, டெல்லி அருகே அரியானாவின் குருகிராமில் உள்ள மெடன்டா மருத்துவமனையில் அமித்ஷா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். சமீபத்தில், கொரோனா பாதித்து 9 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் மத்தியபிரதேச மாநில பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், அமித்ஷா விரைவில் நலம் பெற வேண்டுமென பிரார்த்திப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

* கேரளாவில் கடந்த ஜனவரியில் முதல் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதிலிருந்து 185 நாட்களில் இந்தியாவில் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* பாதிப்பு எண்ணிக்கை 110 நாளில் 1 லட்சத்தை எட்டிய நிலையில், அடுத்த 75 நாளில் 17 லட்சமாக அதிகரித்துள்ளது.

* மொத்த பாதிப்பில் 60 சதவீதமும், பலி எண்ணிக்கையில் 60 சதவீதமும் கடந்த ஒரே மாதத்தில் (ஜூலை) ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கடந்த ஜூலை 1ம் தேதி மொத்த பாதிப்பு 6 லட்சமாக இருந்தது. பலி 17,500 ஆக இருந்தது. தற்போது பாதிப்பு 18 லட்சத்தை நெருங்கி உள்ளது. பலி 37,500 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: