விருதுநகரில் விறுவிறு விற்பனை இயற்கையும், நவீனமும் இணைந்த வெட்டிவேர், ப்ளூடூத் முகக்கவசம்

* நறுமணம் வீசும்; மூச்சுத்திணறல் வராது

* செல்போனிலும் அரட்டை அடிக்கலாம்

விருதுநகர்: மூச்சுத்திணறலை தடுக்க வெட்டிவேர், சிரமமின்றி செல்போனில் பேச ப்ளூடூத் வசதியுடன் தயாரான மாஸ்க், விருதுநகரில் கலக்கி வருகிறது.

கொரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயமாகி உள்ளது.  நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலியால்,  முகக்கவசம் தயாரிப்பு மிகப்பெரிய தொழிலாக மாறி விட்டது. ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் முகக்கவசம் தயாரிப்பில் களம் இறங்கியதால் தெருக்களில், கடைகளில் ரூ.10 முதல் ரூ.50 வரை விதவிதமாக முகக்கவசங்கள் வரிசை கட்டி தொங்குகிறது.

இதில் வித்தியாசத்தை காட்டும் வகையில் வாசனை, மூலிகை வேர் கலந்த மாஸ்க் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் அருகே குந்தலப்பட்டியை சேர்ந்த நாகராஜன் `அல்ட்ரா மாடல் ப்ளுடூத்’ஐ இணைத்து முகக்கவசங்களை விற்பனை செய்து வருகிறார். இரண்டு மடிப்பாக தைக்கப்படும் முகக்கவசத்தின் நடுவில் 5 கிராம் வெட்டி வேரை நிரப்பி துணியில் சொருகி விடுகிறார். அத்துடன் நடுவில் உள்ள மடிப்பில் ப்ளுடூத்தை இணைத்து சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளார்.  வாயை மூடி முகக்கவசம் அணிவதால் சாதாரணமாக பேசுவது கூட எதிரில் நிற்பவருக்கு தெளிவாக கேட்காது. போன் அழைப்பு வந்து பேசினால் தெளிவின்றி கேட்கும். ப்ளுடூத்தை முகக்கவசத்தில் இணைப்பதால் பேசுவது துல்லியமாக இருக்கும்.

இதுகுறித்து நாகராஜ் கூறுகையில், ``முகக்கவசம் அணிவதால் பலருக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இது வராமல் தடுக்க வெட்டிவேரை இணைத்து மூலிகை முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்கிறேன். தொழில்நுட்பத்தை இணைக்கும் வகையில் ப்ளுடூத்தை இணைத்துள்ளேன். வாடிக்கையாளர் சக்திக்கேற்ப ரூ.300 முதல் ரூ.1,500 வரை விற்கிறேன்’’ என்றார்.

Related Stories: