பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது எப்படி? காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வகுப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது கல்வித்துறை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி 3 முறைகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் நடப்பு கல்வியாண்டில் பாடங்களை ஆன்லைன் மூலம் பல்வேறு பள்ளிகள் நடத்தி வருகின்றன. இது பள்ளிக்கு பள்ளி மாறுப்பட்டதால் பெற்றோர், மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையரும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்விஇயக்குநர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதினார்.

மேலும், சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர்நீதி மன்றம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்து இருந்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வித்துறை தற்போது, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்டார். இதன்படி மூன்று முறைகளில் அல்லது வழிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முதலாவதாக, இணைய தள வசதியுடன் கூடிய  கணினி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, ஆகியவற்றின் மூலம் நடத்தலாம்.

* ஒரு பகுதி ஆன்லைன் வழி என்ற வகையில், வழக்கமான இணையதள வசதி கிடைக்காத பட்சத்தில் கணினி, ஸ்மார்ட் போன் மூலம் நடத்தலாம்.

* ஆன்லைன் அல்லாத வழியில், மிக குறைந்த அளவில் போன், டாப்லட், கணினி  ஆகியவற்றில்  இணைய தள இணைப்பு கிடைக்கும் போதும்,  பதிவிறக்கம் செய்ய முடியாத இணைய தள இணைப்பு இல்லாத போதும், டிவி, ரேடியோ ஆகியவை இல்லாத போதும் ஆன்லைன் அல்லாத வழியில் நடத்தலாம்.

* தமிழக பள்ளிக் கல்வித்துறை வீட்டு பள்ளி முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் கல்வி டிவி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இவற்றை மீண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஒளிபரப்ப வேண்டும். குழந்தைகளின் உடல் நலம் கருதி மேற்கண்ட கல்வி ஒளிபரப்பு செய்யப்படும் போது, குழந்தைகள் ஒரு முறையில் ஒரு மணிநேரம் மட்டுமே அமர்ந்து கவனிக்கும் வகையில் ஒளிபரப்ப வேண்டும்.

* ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் மேற்கண்ட ஒளிபரப்பு பாடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கல்வித்துறை இணைய தளத்தில்வசதிகள் செய்ய வேண்டும்.

* இ-பாட்ஷாலா என்று என்சிஇஆர்டி கொண்டு வந்துள்ள திட்டத்தில் 1886 ஆடியோக்கள், 2000 வீடியோக்கள், 696 இ-புத்தகங்கள், 504 பிலிப் புத்தகங்கள் ஒன்று முதல் 12ம் வகுப்புகளுக்காக இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. இவை மொபைல் போனிலும் கிடைக்கும். அதையும் பயன்படுத்தலாம்.

* ஸ்வயம் என்னும் தேசிய ஆன்லைன் பிளாட் பாரத்தில் 1900 பாடப்பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவை 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை மாணவர்களுக்கானது இவற்றையும் பயன்படுத்தலாம்.

* தமிழக பள்ளிகளில் இ-கல்வி திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் இ-கற்றல் பொருளடக்கங்களும், 390 டிஜிட்டல் பாடப்புத்தகங்களும் 2000க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களும் ஒரே இணைய தளத்தில் கிடைக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளன. இவற்றை //e-learn.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் இருந்தும் கற்கலாம்.

* தமிழக ஆசிரியர்கள் மேடை, கல்வித் தொலைக்காட்சி(யூடியூப்),மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன யூடியூப் சேனல்கள், ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

* ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் போது ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை நியமித்து சைபர் கிரைம் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெரிவிக்க வேண்டும். ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பாடம் நடத்த வேண்டும். பாடத்தின் இடையில் மாணவர்களுக்கு சிறிய உடற்பயிற்சிகள் சொல்லித் தரலாம். மன வளக்கலையும் நடத்தலாம். வருகைப்பதிவு செய்யலாம். அதிகப்படியான ஓசை இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு ஆன்லைன் பாடப் பிரிவும் 30 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இடையில் 10-15 நிமிடங்கள் மாணவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இடைவேளை விட வேண்டும்.

* ஒரு ஆசிரியர் ஒரு நாளில் 6 பாட வேளை நடத்தலாம். இதன்படி 28 ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.

* ஆசிரியர்கள் கியூஆர் கோடு பயன்படுத்தி பாடப்புத்தகங்களை தேர்வு செய்து பாடம் நடத்தலாம்.

* வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்த வேண்டும்.

* ஆன்லைன் தொடர்புகள், மாணவர்களுக்கான பணி ஒதுக்கீடுகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைதான் இருக்க வேண்டும்.

* ஆரம்ப பாடத்துக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம்நடத்த அட்டவணை தேவையில்லை. அத்துடன் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாட 30 நிமிடங்களுக்கு மேல்செல்லகூடாது.

* ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு ஒரு நாளில் இரண்டு பிரிவுகளில் 30-45 நிமிடங்களுக்கு மேல்நடத்த கூடாது.

* 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான்கு பிரிவுகளில் 30-45 நிமிடங்கள் இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 5 நிமிடங்களை ஒதுக்கி மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளவும்,  பயிற்சிகள் மேற்கொள்ளவும்,தாங்களாகவே பயிற்சிகள் செய்யவும் ஒதுக்க வேண்டும்.

* மாணவர்கள் ஒவ்வொரு பாட வேளையிலும் கேள்விகள் கேட்கும் வகையில் கைகளை உயர்த்தி கேள்விகள் கேட்க பழக்கப்படுத்த வேண்டும்.

* இணைய தள வசதியுடன் கூடிய கணினி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி மூலம் ஆன்லைன் வகுப்பு நடத்தலாம்.

* தமிழக ஆசிரியர்கள் மேடை, கல்வித் தொலைக்காட்சி (யூடியூப்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன யூடியூப் சேனல்களை பயன்படுத்தலாம்.

* ஆசிரியர்கள் கியூஆர் கோடு பயன்படுத்தி பாடப்புத்தகங்களை தேர்வு செய்து பாடம் நடத்தலாம்.

* ஒவ்வொரு ஆன்லைன் பாடப் பிரிவும் 30 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இடையில் 10-15 நிமிடங்கள் மாணவர்களுக்கு இடைவேளை விட வேண்டும்.

* ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை நியமித்து சைபர் கிரைம் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.

* ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு ஒரு நாளில் 2 பிரிவுகளில் 30-45 நிமிடங்களுக்கு மேல் நடத்தக் கூடாது.

Related Stories: