போலீஸ் தாக்குதல் சம்பவங்கள் எதிரொலி.. 7 ஆண்டுகளுக்கு கீழ் சிறைத்தண்டனை உள்ள குற்றங்களில் காரணமின்றி கைது நடவடிக்கை கூடாது : டி.ஜி.பி.திரிபாதி எச்சரிக்கை

சென்னை: 7 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான ஆண்டு சிறைத்தண்டனை உள்ள குற்றங்களில் காரணமின்றி கைது நடவடிக்கை கூடாது என்று அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி.திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தகுந்த காரணமின்றி கைது செய்யக்கூடாது என்று டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி.திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

*7 ஆண்டுகள் அல்லது அதற்கு  குறைவான ஆண்டு சிறைத்தண்டனை உள்ள குற்றங்களில் தகுந்த ஏற்புடைய காரணமின்றி கைது நடவடிக்கை கூடாது.

*புலன் விசாரணை அதிகாரி முதலில் குற்றத்தன்மையை ஆராய்ந்து கைது செய்ய வேண்டியதன் அவசியத்தை எழுத்துமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாத புலன் விசாரணை அதிகாரியின் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.

*மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் நேரில் ஆஜர்ப்படுத்தும் போது, அவர் நீதிமன்ற காவலுக்கு ஏன் உட்படுத்தப்படுகிறார் என்பதற்கு உரிய விளக்கத்தினை குற்றவியல் நீதித்துறை நடுவர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் எந்திரத்தனமாக செயல்பட்டால் அவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் துறை ரீதியான எடுக்க வேண்டும்.

*எனவே புலன் விசாரணை அதிகாரி 7 அல்லது அதற்கு குறைவான ஆண்டுகள் சிறை தண்டனை உள்ள வழக்குகளில் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போது, மேலே குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: