நாள் முழுக்க உழைத்தாலும் ரூ.15 தான் கூலி பட்டினி தவிப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள்: ஊரடங்கால் நேர்ந்த அவலம்

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தேசிய ஊரக வேலை திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர் என புள்ளி விவரங்களை அடுக்கி வருகிறது மத்திய அரசு. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள், வேலையின்றி பரிதவிக்கின்றனர். அப்படியே உள்ளூரில் வேலை கிடைத்தாலும், கிடைக்கும் கூலி கால் வயிற்று கஞ்சிக்கு கூட வழிசெய்யவில்லை என்பதை சில ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. கட்டுமான தொழில், செங்கல் சூளை போன்றவற்றை தான் கூலித் தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பு பறிபோன பிறகு, பெரும்பாலானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். பலர் சொந்த மாநிலம் செல்ல வழியின்றி இருக்கும் இடத்திலேயே பட்டினியோடு பரிதவிக்கின்றனர். கிடைத்த வேலையை செய்ய வேண்டிய அவல நிலை. பல மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களின் நிலை இதுதான்.

புலம்பெயர் தொழிலாளர் குடும்பத்தில் உள்ள பலர், வீட்டில் இருந்தே ஆர்டர் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். வேலை தேடி இவர்கள் இடம்பெயர்வதில்லை என்றாலும், கணவர் வேலைக்கு சென்றபிறகு அதே ஊரில் வீட்டில் இருந்தோ அல்லது அக்கம்பக்கத்திலோ வேலை செய்து குடும்பச்சுமையை பகிர்ந்து கொள்கின்றனர். கணவனுக்கு வேலை இல்லாததால், இப்படிப்பட்ட பெண்கள் தலையில்தான் பெரும் குடும்பச்சுமை விழுந்துள்ளது. இத்தகைய பெண்கள் பலர் ஊதுபத்தி தயாரிப்பது, பைகளை தைப்பது, ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு சட்டை காலர்கள் தைத்து கொடுப்பது, புடவைகளில் கல், ஜிகினா ஒட்டித்தருவது, எம்பிராய்டரி போன்ற தொழில்களை செய்து பிழைக்கின்றனர்.

தற்போது ஊரடங்கில் வேலை வாய்ப்பு இல்லாததால், நாளெல்லாம் உழைத்தாலும் மிக சொற்ப கூலிதான் கிடைக்கிறது. இதுதொடர்பாக அகமதாபாத் பகுதியில் கள ஆய்வு நடத்தப்பட்டது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. இவர்களில் பலர் ஜவுளித்துறை சார்ந்த வேலைகளைத்தான் நம்பியுள்ளனர். புடவையில் கல், ஜரிகைகள் ஒட்டும் வேலைதான் பலருக்கு கிடைத்துள்ளது. ஒரு புடவையில் கல் பதிக்க 5 ரூபாய் கூலி. நாளெல்லாம் முயன்றாலும் 3 புடவைக்கு மேல் ஒட்டவே முடியாது.

இதனால் எவ்வளவு பாடுபட்டாலும் ஒரு நாள் வருவாய் 15 ரூபாயை தாண்டவில்லை. ஊரடங்கிற்கு முன்பு குறைந்த பட்சம் தினமும் 50 ரூபாய் சம்பாதிக்க முடிந்தது. மாலை கோர்ப்பது, பை தைப்பது போன்ற வேலைகள் கிடைக்கும். ஒன்றுக்கு 2 ரூபாய் கூலி என்றாலும், ஓரளவு சம்பாதிக்க முடியும். இப்போது கடினமான வேலைக்கு குறைந்த கூலிதான் கிடைக்கிறது. ஊரடங்கு தளர்வால்தான் இப்படி ஒரு சில வேலைகள் கிடைக்கின்றன. இல்லையென்றால் இதற்கும் வழியில்லை.

நம்பி வந்த இடத்தில் கணவருக்கும் வேலை இல்லாததால், தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை, மளிகை பொருட்கள் கூட வாங்க இயலவில்லை. மாநில அரசின் உதவி எண்ணுக்கு அழைத்தும் பலனில்லை. ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. இலவச ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை என கண்ணீருடன் கூறுகின்றனர்.

* நகர பகுதிகளில் வீட்டில் இருந்தே ஒப்பந்த மற்றும் ஆர்டர் அடிப்படையில் கூலி வேலை செய்யும் பெண்கள் 73 லட்சம் பேர் என சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

* வருவாய் தேவைக்காக வீட்டில் இருந்தே வேலை செய்யும் பெண்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

* தற்போது ஊரடங்கில் கூலி குறைவாக கிடைப்பதால், குழந்தைகளையும் வேலையில் ஈடுபடுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: