தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை: ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறார். 6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி, இன்று காலை 10 மணிக்கு 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கொரேனாவை பரவலை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம். தற்போது, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இன்று மாலை தமிழக அரசு இறுதியாக என்ன முடிவு எடுத்துள்ளது என்பது பற்றி அறிவிக்க திட்டமிட்டுள்ளது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். அப்போது அறிக்கை அளித்த மருத்துவ குழுவினர், ஊரடங்கு மட்டுமே கொரோனாவை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சரியான தீர்வு ஆனாது. ஊரடங்கு என்பது, பெரிய கொடாரியை வைத்து கொசுவை அழிப்பது போன்றது. அதனால், அதை தவிர்த்து அரசு மாற்றி யோசிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியது. இதனால், அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கை அறிவித்தது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

தற்போது, ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் என்ன முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என்பதில் பொதுமக்களும், முக்கியமாக வணிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், கடந்த ஜூலை மாதத்தில் இருப்பது போன்று ஆகஸ்ட் மாதத்தில் ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும், மாவட்டங்களுக்குள் இடையே வேண்டுமானால் பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து இயக்கப்படாது என்றும், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை. வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. அதே நேரத்தில் கடைகள் திறப்பு நேரத்தில் எந்த வித மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை அறிவிக்கிறார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

* ‘சென்னையில் படிப்படியாக குறைகிறது’

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: கொரோனா தமிழகத்தில் தடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது, இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டம் கிராமப்புறப் பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குடிமராமத்துத் திட்டத்தில் 85 சதவீதப் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன, எஞ்சிய 15 சதவீதப் பணிகள் நிறைவடைந்து, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் முழுவதும் சேமித்து வைக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

சுமார் நாள்தோறும் 500 முதல் 600 வரை காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன. சென்னை மாநகராட்சியில் மட்டும் ஏறக்குறைய 25,532 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. அந்த முகாம்களில் சுமார் 14,50,000 நபர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக, படிப்படியாக சென்னை மாநகரத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. அதேபோல, பிற மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதன் காரணத்தினால், அதில் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்ற காரணத்தினால் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கின்றது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 63 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதிகமான பரிசோதனை செய்யப்படுவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதுவரை 24,75,866 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகின்றார்களோ, அந்த அளவுக்குத்தான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: