செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர், திம்மாவரம், சிங்கபெருமாள் கோயில், மறைமலை நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்தது. ஆனால், பகலில் கடுமையான வெயில் அடித்தது. அதன் உக்கிரம் தாளாமல், மக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று தொடர்ந்து மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி பெய்து வரும் தொடர்மழையால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். செய்யூர்: செய்யூர் தாலூகா சூனாம்பேடு, கடப்பாக்கம், பவுஞ்சூர், சித்தாமூர், வெண்ணாங்குபட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. அதன் பிறகு, இரவு 10 மணியளவில் துவங்கிய மிதமான மழை நேற்று காலை வரை பெய்தது. பின்னர் இடைவெளி விட்டு, மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.
செய்யூர் தாலுகா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இதுவரை பெய்த மழையால், பல நீர்நிலைகளில், சுமார் 40 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியது. இதையொட்டி, விவசாயிகள் பெரும்பாலானோர் விவசாய பணிகளை, மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ளனர். செய்யூரில் மழை பதிவு 97.60 மி.மீட்டர் என காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணி நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திலேயே அதிக மழை பதிவு செய்யூர் தாலுகா பகுதியில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் தென்மாவட்டங்களில் பலத்த மழையும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், உத்திரமேரூர், வாலாஜாபாத், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்பட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால் பாலுசெட்டிச் சத்திரம், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், ஒலிமுகமதுபேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
