சென்னை பல்கலை.யின் அடுத்த துணைவேந்தர் யார்?: 3 பேர் அடங்கிய இறுதி பட்டியலை ஓரிரு நாளில் ஆளுநரிடம் அளிக்கிறது தேடுதல் குழு..!!

சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார் என்பது குறித்த 3 பேர் அடங்கிய இறுதி பட்டியல் ஓரிரு நாளில் ஆளுநரிடம் தேடுதல் குழு அளிக்கவுள்ளது. சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த துரைசாமியின் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 170 பேர் விண்ணப்பித்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பரிசீலிக்கப்பட்டன. இவற்றில் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள் கணேசன், குமார், உஷா நடேசன் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் தேடுதல் குழு தலைவர் ஜெகதீஷ்குமார் காணொலி காட்சி வாயிலாக நேர்காணல் நடத்தினார். தொடர்ந்து, நேர்காணல் முடிக்கப்பட்ட 12 பேரில் இருந்து மூன்று பேர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இறுதி பட்டியல் ஆளுநரிடம் ஓரிரு நாளில் அளிக்க தேடுதல் குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, 3 பேரிலிருந்து ஒருவரை  சென்னை பல்கலைக்கழக  துணைவேந்தராக தமிழக ஆளுநர் நியமிப்பார். சென்னை பல்கலைக் கழக துணைவேந்தராக தமிழகத்தை  சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட  வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை  பறி கொடுக்ககூடாது என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: