சென்னையில் செயின் பறிக்கும் கும்பல் கைது: 64 கிராம் தங்கம்; 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!

சென்னை:  சென்னையில் நடைப்பயிற்சிக்கு செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த மாதம் ஆர்.கே நகரில் பெண்கள் நடந்து செல்லும்போது செயின் பறிப்பு சம்பவம் அதிகளவில் நடைபெறுவதாக அதிராமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் புகார் அளித்ததன்பேரில், சென்னையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சம்பவ இடங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பார்க்கையில், 800க்கும் அதிகமான அளவில் செயின் பறிப்பு கும்பல்கள் சென்றுள்ளது தெரியவந்தது.

இதில் பெரும்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற கும்பல்தான் இரு பிரிவுகளாக பிரிந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கும்பலில் குறிப்பாக நசீர், அபி மற்றும் அஜய் ராகுல் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது விடியற்காலையில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் ஆட்டோவில் ஓரமாக அமர்ந்திருக்கும் பெண்கள் என அனைவரிடமும், இந்த கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த 3 பேருமே வீட்டிலும் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல லட்சம் ரூபாய் அளவிற்கு வீடு புகுந்து கொள்ளையடிக்கும் இந்த கொள்ளையர்கள் புழல் சிறையில் சந்தித்துக்கொண்டு பின்னர் திட்டமிட்டு, தற்போது செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என போலீசார் வினவியபோது, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால், செயின் பறிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இந்த கொள்ளையர்களிடமிருந்து 64 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 8 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.

Related Stories: