எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

டெல்லி : சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. மத்திய அரசின்  ‘பரத்மலா பரியோஜனா’ கீழ், 277.3 கிமீ சென்னை-சேலம் இடையில் உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அதுதொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் என கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.

இந்த வழக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, சேலம்-சென்னை எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அத்தகைய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.நில கையகப்படுத்தலுக்கு முன்னரே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்பது, குதிரைக்கு முன்னர் வண்டியை பூட்டுவதற்கு சமம் எனவும் அவர் வாதிட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 6ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: