கல்லூரி திறப்பதை ஜனவரிக்கு பிறகே முடிவு செய்ய வேண்டும்: முனைவர் ஜா.அமிர்த லெனின், உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, லயோலா கல்லூரி

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள இன்று உயர்கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகளாகவும், நோயாளிகள் காப்பீட்டு மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரிகளை திறப்பது ஏற்புடையது அல்ல. மாணவர்கள் நமது சமூகத்தின் அடுத்த தலைமுறை. எதிர்காலம் அவர்கள்தான். அவர்களை பலி கொடுப்பதற்கான ஆபத்தான முயற்சியில் எப்போதுமே ஈடுபடக்கூடாது. குழந்தைகளின் வளமான எதிர்காலம் நமக்கு ரொம்ப முக்கியம். இச்சூழலில் கல்லூரிகளில் கூடி படிக்கிறது என்பது சாத்தியம் இல்லாதது. பாதுகாப்பற்ற கல்லூரி சூழலுக்குள் மாணவர்களை அனுமதிப்பது பேராபத்தாக முடியும். அதிலும் அரசு கல்லூரிகளில் நிலவும் கட்டமைப்பு வசதி குறைபாடுகள் எளிதில் நோய்த் தொற்றை உருவாக்கும் ஆபத்து நிறைந்தவை.  

நவீன கழிப்பறை வசதி, போதிய காற்றோட்ட வகுப்பறை, அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தத்தக்க வசதிகளை மேம்படுத்த வேண்டும். எனவே, கல்லூரிகள் திறப்பு என்பதை ஜனவரிக்கு பிறகு யோசிக்கலாம். இந்த ஒரு ஆண்டிற்கான கல்வி முறையை மாற்றி அமைக்கலாம். ஜனவரிக்கு பிறகுதான் கொரோனாவின் தீவிரம் என்று ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. ஜனவரி வரை ஆபத்து இருக்கும் என்று கூறும்போது, அதனை மீறி நாம் கல்லூரியை திறந்தால் மாணவர்களின் உடல்நலம், உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

மேலும், ஆன்லைன் வகுப்புகள் ஏற்புடையதல்ல. இந்த தொழில்நுட்ப ஆன்லைன் படிப்பு எல்லோருக்கும் பொருத்தமானது இல்லை. எல்லோரிடமும் செல்போன், கணினி இல்லை. அப்படிப்பட்ட நிலையில் மாணவர்களை கட்டாயமாக செல்போன், கணினி வகுப்பில் கலந்துகொள்ள சொல்வது ஏற்புடையது அல்ல. கல்லூரிகளில் முதல் தலைமுறை மாணவர்கள்தான் அதிகம் படிக்க வருகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேர் கிராமப்புற ஏழை மாணவர்கள். அவர்களுக்கு இணையதள வசதி, தொழில்நுட்ப வசதிகள் இருக்காது. அவர்களை ஆன்லைன் வகுப்புக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஏற்ககூடியதல்ல. மேலும் தொலைக்காட்சியை பயன்படுத்தி எடுக்கும் கல்வி முறை வேண்டுமானாலும் ஏற்கக்கூடியதாக இருக்கும். ஆன்லைன் வகுப்புகள் செல்போன் விற்பனைகளைத்தான் எதிர்மறையாக அதிகரித்துள்ளது. வகுப்பறை சூழல் வேறு, அதனை கம்ப்யூட்டர், செல்போனில் கொடுக்க முடியாது. வகுப்பறை சூழல்தான் கற்பிப்பு திறனை அதிகரிக்கும். எந்த மாநிலங்களாக இருந்தாலும் கல்லூரி திறப்பதை தள்ளி வைக்க வேண்டும்.

மாணவர்களின் உடல் நலன், உளவியல் தொடர்பான விஷயம். எனவே தமிழக அரசும், இந்த முடிவுகளை கைவிட்டு மாணவர்களுக்கு கல்வியை சுமையாக வைக்க வேண்டாம். அதை விரும்பி கற்க வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இந்த காலகட்டதை அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கு அரசு கல்லூரிகளில் பல வசதிகள் இல்லாமல் உள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பெண்கள் கல்லூரி கல்வியிலிருந்து இடைநிற்றலுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி பெண் குழந்தைகளின் கல்வி வாய்ப்பை பறிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண் குழந்தைகளின் இடைநிற்றலைக் கண்காணிப்பதுடன்  அனைத்து மாணவர்களின் பருவக்கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். ஜனவரிக்கு பிறகுதான் கொரோனாவின் தீவிரம் என்று ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. ஜனவரி வரை ஆபத்து இருக்கும் என்று கூறும்போது, அதனை மீறி நாம் கல்லூரி திறந்தோம் என்றால் அது மாணவர்களின் உடல்நலம், உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

* தமிழகத்தில் பள்ளிகளை திறக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல:  கு.தியாகராஜன், மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதும் மனித உயிர்களை காப்பாற்றுவதும்தான் பிரதான எண்ணமாக தமிழக அரசுக்கு இருக்க வேண்டுமே தவிர, பிற மாநிலங்களில் பள்ளிகளை திறக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஆர்வம் மிகுதியால் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல. இந்திய அளவில் பார்க்கும் போது, தமிழகத்தில்தான் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், 12 வயதுக்குட்பட்ட குழந்தை பருவத்தினர். 3500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இருப்பினும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் பள்ளிகளை திறக்கும் முடிவுகளை எடுப்பது மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாணவர்களின் கல்வி முக்கியம்தான், அதைவிட அவர்களின் உயிரும், அவர்களின் பெற்றோரின் உயிரும் மிக முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும். கொரோனா தொற்று குறைவாக இருக்கும் போது பள்ளிகளை மூடிய அரசு, கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது பள்ளிகளை திறக்க முயற்சிப்பது கூடாது. கொரோனாவுக்கு மருந்துகள் இல்லாத நிலையில், சமூக விலகலே தீர்வு என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறந்தால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுமா என்பது சந்தேகமே. அரசுப் பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் தற்போது அவர்களிடம் உள்ள வகுப்பறைகளுக்கு தேவையான அளவைவிட அதிக மாணவர்கள் இருக்கின்றனர்.

அதனால் ஒரு வகுப்பறையில் மாணவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார வைப்பது கடினம். அதற்கேற்ப வகுப்பறைகள் அரசுப் பள்ளிகளில் இல்லை. இதை கவனத்தில் கொள்ளாமல் பள்ளிகளை திறந்தால் பெற்றோருக்கு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் இடைவெளி விட்டு உட்கார வைக்கப்பட்டாலும், அவர்கள் வீடுகளுக்கு சென்று சேரும் வரை சமூக இடைவெளியை கடைபிடிப்பார்களா என்பது எப்படி உறுதி செய்ய முடியும். தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் பொதுப் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர்.

முதலில் அதை சரிசெய்துவிட்டு, சமூக இடைவெளியுடன் போக்குவரத்து வசதிகளை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பிறகு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு, முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பான சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு, படிப்படியாக பள்ளிகளை திறப்பதுதான் சிறப்பாக இருக்கும். எங்களை பொறுத்தவரையில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகுதான் பள்ளிகளை திறக்க வேண்டும். இனி வரும் காலங்கள் மழைக்காலமாக இருக்கும். அப்போது சமூக இடைவெளியில் மாணவர்களை உட்கார வைக்க முடியாது. அதிக அளவு மழை பெய்தால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நன்கு ஆய்வு செய்த பிறகே பள்ளிகளை திறக்கும் முடிவை எடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் பள்ளிகளை திறக்க முயற்சிக்கிறார்கள் என்று தமிழகத்திலும் அதேபோல செய்ய முயற்சித்தால், மாணவர்களுக்கு அதிக அளவில் தொற்று ஏற்பட்டுவிடும். மாணவர்களின் கல்வியை விட மாணவர்களின் உயிரும் முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும். இதுவரை இழந்த மனித இழப்புகள்போதும், இனியும் இழப்புகளை குறைக்க முயல்வோம். இனி வரும் காலங்கள் மழைக்காலமாக இருக்கும். அப்போது சமூக இடைவெளியில் மாணவர்களை உட்கார வைக்க முடியாது. அதிக அளவு மழை பெய்தால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

Related Stories: