நள்ளிரவில் திருடனை விரட்டி பிடிப்பதற்காக 2வது மாடியில் இருந்து கீழே குதித்த வாலிபரின் இடுப்பு எலும்பு முறிந்தது: குமரன் நகரில் பரபரப்பு

சென்னை: சென்னை குமரன் நகர் வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் ராஜா (35), பிளம்பர். இவர், தனது குடும்பத்துடன் 2 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் வசித்து வருகிறார். இரவில் காற்றுக்காக ராஜா தனது வீட்டின் கதவை திறந்துவைத்து விட்டு மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் தூங்கி உள்ளார். அப்போது, வீட்டின் பீரோவை யாரோ திறப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், திடுக்கிட்டு எழுந்த ராஜா வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, ஒரு ஆசாமி பீரோவில் உள்ள பொருட்களை திருடுவது தெரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா, திருடனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். பதிலுக்கு திருடனும் ராஜாவை அடித்துவிட்டு 2வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். திருடனை பிடிப்பதற்காக, ராஜாவும் 2வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது, ராஜாவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார். அந்த சந்தர்ப்பதை பயன்படுத்திக்கொண்ட திருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து ராஜா கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய திருடனை தேடி வருகின்றனர். ராஜாவுக்கு இடுப்பு எலும்பு உடைந்து உள்ளதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருடனை பிடிக்க முயன்ற போது வாலிபருக்கு இடுப்பு எலும்பு முறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: