மக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகளை மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னை: சென்னையில் அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்டுள்ள பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் மிகப்பெரிய வணிக வளாகங்கள், மால்கள் ஆகியவை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு மால்களுக்கு இணையாக வணிக வளாகங்களில் பல விதமான பிராண்டுகள் விற்பனை செய்யப்படும் கடைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஏ.சி. போன்றவற்றை பயன்படுத்தாமல் சமூக இடைவெளி உள்ளிட்ட  பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தும் பல்வேறு வணிக வளாகங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் சென்னை மாநகராட்சிக்கு வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பல பிராண்டுகள் விற்கப்படும் வணிக வளாகங்களை இனி மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனே வணிகர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எந்தமாதிரியான கடைகளை மூட வேண்டும் என்ற குழப்பம் நிலவியிருந்தது. அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களும் வெளிவந்த காரணத்தினால் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதில் மக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகளை மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வணிக வளாகங்கள் செயல்படுவதற்கு அனுமதி உண்டு எனவும், சமூக வலைத்தளங்களில் சென்னையில் அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்ற பரவிய தகவல் தவறானது எனவும் குறிப்பிட்டார். சென்னையில் சுமார் 75 மிகப்பெரிய வணிக வளாகங்கள் இருக்கின்றன. மறு உத்தரவு வரும் வரை அவை செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆணையர் தெரிவித்தார்.

Related Stories: