தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

காஞ்சிபுரம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு, நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 380 ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடியாக அனைத்து வகையான நகைக்கடன்கள், குழுக் கடன்கள் வழங்கப்படும் நிலையில், தற்போது தமிழக அரசும், கூட்டுறவுத் துறையும் கடன்கள் அனைத்தும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் உறுப்பினர்கள் பெயரில் மிரர் அக்கவுண்ட் தொடங்கி, அதன்பேரில் மட்டுமே பட்டுவாடா செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

இதனால், ஏழை விவசாயிகள், நகர்ப்புறங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு பலமுறை அலைய வேண்டும். இதனால் வசூல் பணியும் பாதிக்கப்படும். எனவே, மிரர் அக்கவுண்ட் மூலம் பட்டுவாடா என்பதை மறு பரிசீலனை செய்து, ஏற்கனவே உள்ள நடைமுறையில் பணப்பட்டுவாடா செய்ய அனுமதிக்க வேண்டும். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ரேஷன்கடை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 2 பேர் இறந்துள்ளனர். எனவே, பணியாளர்கள் நலன்கருதி, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை ரேஷன்கடை பணியாளர்கள் உள்பட அனைத்து கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

ரேஷன்கடை பணியாளர்களின் ஒப்பந்தக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால், ஊதியக் கமிட்டி அமைத்து ரேஷன்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

Related Stories: