ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்று 3 ஆண்டு நிறைவு: தலைவர்கள் வாழ்த்து: 13 அவசர சட்டத்துக்கு ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ராம்நாத் கோவிந்த் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு, கடந்த 2015ல் இருந்து 2017 வரை பீகார் மாநில ஆளுநராக இருந்தார். இவர், 1994 முதல் 2006ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்று நேற்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இது பற்றி நேற்று அது வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தங்களை பற்றியும், தங்களின் குடும்பத்தினரை பற்றியும் கவலைப்படாமல் நாட்டின் சுகாதாரத்தை பாதுகாத்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு, தனது குடும்பத்தினருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது ஒரு மாத சம்பளத்தை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதி உதவி திட்டத்துக்கு அளித்துள்ளார். மேலும், சம்பளத்தில் 30 சதவீதத்தை ஓராண்டு வரையில் அத்திட்டத்துக்கு வழங்கவும் முன்வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் அவர் ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், தீயணைப்பு துறையினர் உள்பட 6,991 பேரை சந்தித்துள்ளார். மேலும், நாட்டிலுள்ள 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வருகை புரிந்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மூன்றாண்டு பதவி காலத்தை நிறைவு செய்துள்ள கோவிந்துக்கு துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

*  ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து இதுவரை, மத்திய அரசின் 48 மசோதாக்கள், மாநில அரசுகளின் 22 மசோதாக்கள், 13 அவசர சட்டங்களுக்கு கோவிந்த்

ஒப்புதல் அளித்துள்ளார்.

* மேலும், 11 ஆளுநர்கள், தலைமை நீதிபதி, தலைமை தகவல் ஆணையர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோரை நியமித்துள்ளார்.

Related Stories: