வேலூர் மாவட்டத்தில் அரசு குவாரி திறந்தும் பயனில்லை: மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் முடக்கம்

* சென்னையில் இருந்து ஆன்லைனில் புக்கிங்

* உள்ளூர் தேவைக்கு கிடைக்காமல் அவதி

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் அரசின் மணல் குவாரி செயல்பட்டும் மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப்பணிகள் முடங்கிபோயுள்ளது. சென்னையில் இருந்து ஆன்லைனில் புக்கிங் செய்து விடுவதால் உள்ளூர் தேவைக்கு மணல் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கர்நாடகாவில் தொடங்கி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழையும் பாலாறு 222 கி.மீ தூரம் ஓடி செங்கல்பட்டு அருகே கடலில் சங்கமிக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாலாறு நீண்டதூரம் ஓடுகிறது. குறிப்பாக வாணியம்பாடியில் தொடங்கி ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, வாலாஜா வழியாக சென்று காவேரிப்பாக்கத்தில் முடிகிறது. ஏற்கனவே பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கடத்தல், சட்டவிரோத குவாரி போன்றவற்றால் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தில் அபாயகரமான மாவட்டங்களாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் இருந்து வருகின்றன.

ஏற்கனவே மணல் மாபியாக்கள், நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட மணல் சுரண்டி விற்பனை செய்துவிட்டனர். இதற்கு அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை துணையாக இருந்தனர். இதற்கு பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பட்டு கிராமம் மற்றும் மேல்மொணவூர் பகுதியில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. அந்த அனுமதியும் முடிவடைந்தது. மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு சட்டவிரோத மணல் கடத்தலும் நடந்தது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் மணல் குவாரி திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, சென்னை பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு, சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு கோட்டம் செயற்பொறியாளரின் நேரடி கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா வடுகன்தாங்கல் அருகே மணல் குவாரி திறக்கப்பட்டது. அங்கு மணல் எடுக்க ஆன்லைனில் அனுமதி பெற வேண்டும்.

அதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். அதில் நூறு சதவீதம் சென்னையில் இருந்தே பதிவு செய்து விடுகின்றனர். ஆன்லைன் பதிவு எப்போது தொடங்குகிறது. எப்போது முடிகிறது, என்பதை கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்த குவாரியில் இருந்து தினந்தோறும் லாரிகள் மூலம் சென்னைக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் வேலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு லோடு மணல் கூட கிடைப்பதில்லை. அனைத்தும் ஆன்லைன் புக்கிங் என்று ஒரே வார்த்தையில் சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம். உள்ளூர் தேவைக்கே மணல் இல்லாதபோது வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வீடுகள் கட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்கனவே 3 மாதங்களாக கட்டுமான பணிகள் நடக்கவில்லை. மணலை உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு ஒரு லோடு மணல் (4 யூனிட்) ₹35 ஆயிரம் முதல் ₹40 ஆயிரம் வரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.இது ஒரு சவரன் தங்கத்தை விட விலை அதிகமாகும். அந்தளவு தங்கத்தைவிட மேலான ஒன்றாக வேலூர் மாவட்டத்தில் மணல் மாறியுள்ளது.  எனவே இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உள்ளூர் மக்களின் தேவைக்கும் மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு திட்டங்களும் மணல் தேவையும்

தமிழக அரசின் பசுமைவீடு திட்டம், மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது. கையில் வைத்துள்ள பணத்தை செலவிட்டு வீடு கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான பணம் வழங்கப்படும். அதுவரை பயனாளிகள் காத்திருக்க வேண்டும். இந்நிலையில்  தட்டுப்பாடு காரணமாக ₹35 ஆயிரம் கொடுத்து மணல் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த அரசு திட்டத்திற்கும் மணல் இல்லாமல் பல இடங்களில் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எம்சாண்ட் விலையும் உயர்வு

எம்சாண்ட் விலையும் கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை ₹10 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை இருந்தது. தற்போது ₹21 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். அதுவும் தரத்துடன் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விலையும் இடத்துக்கு இடம் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எம்சாண்ட் மணலை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: