ஆளுங்கட்சியினரின் தலையீட்டை மீறி காய்கறிச் சந்தை மீண்டும் இடமாற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரின் பழமையான ராஜாஜி காய்கறி சந்தை, கொரோனா காரணமாகவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், அடிக்கடி பெய்த மழையால், வையாவூர் காய்கறி சந்தை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து காய்கறி சந்தையை நசரத்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்துக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனால், நசரத்பேட்டை காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்குவதில் நகராட்சி அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

அதில், ராஜாஜி மார்க்கெட்டை சேர்ந்த 147 வியாபாரிகளில் 130 பேருக்கு மட்டும் கடைகளை ஒதுக்கி மற்ற வியாபாரிகளுக்கு பதிலாக, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு கடைகளை ஒதுக்க திட்டமிட்டதாக கூறி, நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தும், அனைத்து வியாபாரிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 22ம் தேதி அதிகாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சப் கலெக்டர் சரவணன், டிஎஸ்பி மணிமேகலை, நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து வியாபாரிகளுக்கும் இடம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆளுங்கட்சியினரின் தலையீட்டையும் மீறி கடைகள் திறக்கப்பட்ட கடைகளுக்குச் செல்ல போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. காய்கறிக் கடைகளுக்கு செல்ல போதிய வழி இல்லாததால், கொள்முதல் செய்ய வரும் சிறு வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே, சிறு வியாபாரிகளின் சிரமத்தை தவிர்க்க கூடுதலாக வழி ஏற்படுத்துவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: