மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கொரோனா நோயாளிகள் சாலை மறியல்

குன்றத்தூர்: மாங்காடு அருகே சிக்கராயபுரம், குன்றத்தூர்- மாங்காடு பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு சிகிச்சை மையம் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தங்கியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை, முறையாக இல்லை. மருந்து, உணவு உள்பட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கவில்லை. போதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நோயாளிகள் சார்பில், அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கொரோனா நோயாளிகள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று திடீரென ஒன்று திரண்டு சென்று, குன்றத்தூர்- மாங்காடு பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மாங்காடு, குன்றத்தூர், போரூர் ஆகிய காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, கோரிக்கைளை அரசுக்கு தெரியப்படுத்தி, விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கொரோனா நோயாளிகளின் திடீர் போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: