பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நூதன போராட்டம்

பூந்தமல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், “தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலை தொடருமானால் மோட்டார் வாகன தொழில் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

எனவே மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விற்பனையை ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை மாநில அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். சுங்க கட்டணத்தை வாகனத்தில் சரக்கு ஏற்றுபவரே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாதிரி பட்ஜெட்டை அல்வா கிண்டி தயாரித்துள்ளோம். இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

Related Stories: