தமிழகம் முழுவதும் கடைகள் இயங்கும் நேரத்தை இரவு 9 மணி வரை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடைகள் இயங்கும் நேரத்தை இரவு 9 மணிவரை நீட்டிக்க வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய வணிக வளாகங்களில் உள்ள மொத்த மற்றும் சில்லரை வணிகத்தை  உடனடியாக திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு எளிதில் காய்கறி மற்றும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட அரசு உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே அரசு வாய்மொழி உறுதி அளித்துள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வணிகர்கள் சேர்ந்த கூட்டுக்குழுவை உடனடியாக அமைத்து கோயம்பேடு மார்க்கெட் இயங்கிட வழிகாட்டு முறைகளை கண்டறிய வேண்டும். மேலும் கோயம்பேடு வணிக வளாகம் மொத்த விற்பனை, செமி ஹோல்சேல் மற்றும் சில்லரை விற்பனை அவற்றிற்கு தனித்தனியாக உரிய கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். பொருளாதார சிக்கலில் மக்கள் இருக்கின்ற இப்பேரிடர் காலத்தில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளித்து,

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை அரசு உறுதிபடுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து வணிகக் கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து வைத்து வணிகம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். ஏற்கனவே பொதுமுடக்கத்தின் போது சீல் வைக்கப்பட்ட கடைகள் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக சீல்கள் அகற்றப்பட்டு, கடைகள் திறந்திட அனுமதித்திட வேண்டும். வணிக நிறுவனம் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி திரும்பப் பெற வேண்டும். கொரோனா பெருந்தொற்று பேரிடர் கால கட்டத்தில் பல்வேறு இன்னல்களையும் சந்திக்கின்ற நிர்ப்பந்தத்திற்கும் வணிகர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.  

இவற்றை தமிழக அரசு கவனத்தில் கொண்டு கடை திறந்து நடத்துகின்ற காலத்தை உணவகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போல இரவு 9 மணிவரை நீட்டித்தும், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வந்து அமர்ந்து பசியாறிச் செல்கின்ற நிலையையும்,  டீ கடைகளில் பொதுமக்கள் அமர்ந்து டீ அருந்தவும் அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: