திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் மழைநீர் கால்வாய் பணி மும்முரம்: கலெக்டர் திடீர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம் திருமழிசை துணைக்கோள் நகரப்பகுதியில் உள்ள தற்காலிக மொத்த காய்கறி சந்தையை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமழிசை காய்கறி சந்தை பகுதியில் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள மழை நீரினை நகராட்சி நிர்வாகத்தின் வாயிலாக முழுமையாக அகற்றி, தொடர் மழை காரணமாக சேதமடைந்த பாதைகள் மற்றும் சாலைகளை கல் மற்றும் மண் கொண்டு சீர் செய்து சமன்படுத்தி, உறுதியான மற்றும் நிலையான சாலைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது. சாலைகளின் குறுக்கே மழைநீர் கால்வாய்கள் அமைத்து, நீர் வெளியேருவதற்கு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களை அனைத்து பணிகளையும் விரைந்து முடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள், அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், ரூ. 100 மதிப்பிலான திட்ட மருத்துவ தொகுப்புகளான கபசுர குடிநீர் சூரணம், ஆடாதொடை மணப்பாகு குடிநீர், தாளிசாதி சூரணம், ஆர்சனிக் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள் மற்றும் பல்வேறு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகள், அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 741 தொழிற்சாலைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 74 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது’’ என்றார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (திருமழிசை)‌ கோவிந்தராஜ், பூவிருந்தவல்லி வட்டாட்சியர் குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: