கொரோனாவால் வேலையிழந்து நிற்பவர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு புதிய திட்டம்: நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்கிறது ஆவின் நிறுவனம்

சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்திற்கு முன்பு முகவர்கள் ஆவதற்காக வைப்பு தொகை ரூ.10,000/- இருந்த நிலையில், தற்போது வைப்புத் தொகை ரூ.1,000/-ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதால், 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000/- பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்பு தொகையாக செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை பெருநகர மாநகரத்திற்கு ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (விற்பனை) அவர்களிடம் வைப்பு தொகையினை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடமாடும் பால் வண்டி முகவர்களாக மாதம் சுமார் ரூ.15,000/- குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே, இவ்வாய்பினை பயன்படுத்திகொள்ள அனைவரும் வருக என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: