மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி சென்னையில் 10 சதவீதம் பேருக்கு விரைவில் கொரோனா பரிசோதனை

சென்னை: சென்னையில் உள்ள 10 சதவீதம் மக்களுக்கு 15 நாளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன்  மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 5 லட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த மாதம் பரிசோதனைகளை அதிகரிக்க முதலமைச்சர் ஆணையிட்டதை தொடர்ந்து, இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரையில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜூன் 19ம் தேதி நாள் ஒன்றுக்கு 4,500 பரிசோதனைகள் வரை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 14,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதல் 1 லட்சம் பரிசோதனைகள் 2 மாத காலத்திலும், இரண்டாவது 1 லட்சம் பரிசோதனைகள் 25 நாட்கள் காலத்திலும், மூன்றாவது 1 லட்சம் பரிசோதனைகள் 16 நாட்களிலும், நான்காவது 1 லட்சம் பரிசோதனைகள் 10 நாட்களிலும் , ஐந்தாவது 1 லட்சம் பரிசோதனைகள் 9 நாட்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது வரை சுமார் 5 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும். பரிசோதனைகளை அதிகரித்து பரவலை கட்டுப்படுத்துவதே சிறந்த முறையாக இருக்கிறது. அதேபோல் குறைந்தபட்சம் அடுத்த 3 மாதங்களுக்காவது சென்னையில் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். பொதுமக்களுக்கு சாதாரண காட்டன் முகக்கவசமே போதுமானது. என்95 முகக்கவசம் அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பொதுமக்களுக்கு சாதாரண காட்டன் முகக்கவசமே போதுமானது. என்95 முகக்கவசம் அவசியம் இல்லை

* ரஜினி இ-பாஸ் வாங்கினாரா?

ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று கேளம்பாக்கம் சென்றாரா இல்லையா என்ற கேள்விக்கு, ‘ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்று வந்தது தொடர்பாக, அவசியமெனில் ஆய்வு செய்து விளக்கம் அளிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Related Stories: