பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு வரும் 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...!!!

சென்னை: பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடந்தது.  இந்த தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 717 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 மாணவ மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர்.  அதில் மாணவியர் 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 பேர். மாணவர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 646 பேர். மொத்த மாணவர்களில் பொதுப்பிரிவின் கீழ் 7 லட்சத்து 28 ஆயிரத்து 516 பேரும், தொழில் பாடப்பிரிவின் கீழ் 51 ஆயிரத்து 415 பேரும்  தேர்வு எழுதியுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம். அதில் மாணவர்கள் 89.41 சதவீதமும், மாணவியர் 94.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளர். மாணவர்களை விட  மாணவியர் இந்த ஆண்டு 5.39 சதவீதம் பேர் கூடுதல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.99 சதவீத  தேர்ச்சியை பெற்று 2ம் இடத்தையும், கோவை மாவட்டம் 96.39 சதவீத தேர்ச்சியை பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில், பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில்  விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்;தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும் விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.

இதனைபோல், 12-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிளஸ்2 மாணவர்கள் வரும் ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் மதிப்பெண்  சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கும்போது மாணவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற  வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் கையுறை அணிவது கட்டாயம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் பள்ளிகளில் சென்று சான்றிதழ்களை  பெறலாம். சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக பள்ளிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: