இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கி: தமிழகத்தில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்...!!!

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த ‘பிளாஸ்மா’ சிகிச்சை முறையில் 20 பேரில் 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ வங்கி அமைப்பதற்காக ரூ.2.50 கோடி செலவில் நவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை ராஜூவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.  பிளாஸ்மா வங்கியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் செய்தார். தொடங்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியானது டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் முதன்மையான பிளாஸ்மா வங்கியாகும். இந்தியாவிலேயே இரண்டாவது பிளாஸ்மா வங்கி தமிழகத்தின் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைபோல், சென்னையில் ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்து உள்ளது.

பிளாஸ்மா’ தானம்:

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியில் ஒரே நேரத்தில் 7 பேர் வரை ‘பிளாஸ்மா’ தானம் அளிக்கலாம். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட 14 நாள்களுக்கு பின்பு பிளாஸ்மா தானம் செய்ய முடியும். பிளாஸ்மா தானம் செய்ய வருபவர்களுக்கு பரிசோதனை நடத்தி தகுதியானவர்களிடம் இருந்து 500 மிலி பிளாஸ்மா எடுக்கப்படும்.

 ஒருமுறை பிளாஸ்மா தானம் செய்த நபர் மீண்டும் 14 நாட்கள் கழித்து மறுபடியும் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம். தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா செல்களை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கலாம்.

Related Stories: