போலி நில உரிமைச்சான்று தயாரித்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது

ஈரோடு :  புஞ்சைபுளியம்பட்டியில் போலி நில உரிமைச்சான்று தயாரித்து வழங்கிய கம்ப்யூட்டர்  சென்டர் உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஈரோடு  மாவட்டம் நம்பியூர் தாலுகா காவிலிபாளையம் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி  என்பவர் நில உரிமைச்சான்றினை புஞ்சைபுளியம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில்  பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். அவரது நில உரிமைச்சான்றின் உண்மை தன்மை  குறித்து அறிய காவிலிபாளையம் வி.ஏ.ஓ. பிரபுவுக்கு  அனுப்பி வைத்தனர்.

அந்த நில உரிமைச்சான்றும், அதில் உள்ள அரசு முத்திரை,  தாசில்தார் கையெழுத்து போன்றவை அனைத்தும் போலியானது என பிரபு  அறிந்தார். இதையடுத்து வி.ஏ.ஓ. பிரபு, நில உரிமைச்சான்று பெற்ற  திருமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில், காவிலிபாளையத்தில் நில  புரோக்கரும், கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளருமான ராமசாமி (40) என்பவரிடம்  அதை பெற்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில்  வி.ஏ.ஓ. பிரபு அளித்த புகாரின் பேரில், போலீசார் போலி நில  உரிமைச்சான்று தயாரித்து வழங்கிய ராமசாமியை பிடித்து, மாவட்ட குற்றப்பிரிவு  போலீசில் ஒப்படைத்தனர்.   இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் ராமசாமியை ஈரோடு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 இதில், போலி அரசு முத்திரை தயாரித்தும்,  தாசில்தார் கையெழுத்தினை போட்டு அவரே போலி சான்றிதழ் வழங்கியதை  ஒப்புக்கொண்டார். இதற்கு முன்பு சுய சான்று, வருவாய்த்துறை சான்று,  பள்ளி தலைமையாசிரியர் சான்று போன்றவைகளை போலியாக தயாரித்து வழங்கியதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் ராமசாமி மீது 3  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது ெசய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். மேலும், ராமசாமியிடம் இருந்து போலி அரசு முத்திரைகள்-12, போலி  சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: