சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னைப் பல்கலைக் கழகம் நடைமுறைப்படுத்தி வரும் இலவச கல்வித்திட்டதின் கீழ் படிக்க விரும்புவோர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த 2011ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக் கழக கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வித் திட்டத்தின் கீழ், 2020-2021ம் கல்வி ஆண்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சென்னைப் பல்கலையில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள் விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், முதல் தலைமுறை மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த இலவச கல்வித் திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் சென்னைப் பல்கலைக் கழக இணைய தளத்தில் (www.unom.ac.in)  22ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

Related Stories: