ரயில் நிலையங்களில் தூய்மை பணிகள் தொடக்கம்; பாதுகாப்பாக மெட்ரோ ரயிலை இயக்க தயார்...சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச்  24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள்,  பொழுதுபோக்குப் பகுதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மே 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இருப்பினும், சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 19ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து  கொண்டே வருகிறது. நேற்று (19/07/2020 )மட்டும் சென்னையில் 14,030 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 1254 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவியது. இதனால், வரும் 31ம் தேதி வரை  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி பொது முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கிற்குப் பிறகு மெட்ரோ ரயிலை இயக்க தயார் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் சென்ற பின் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் மீண்டும் மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ரயில் நிலையம், மின்தூக்கிகள், ரயில்பெட்டிகளில் தூய்மை பணிகள்  தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: