நெல்லிக்குப்பம் அருகே ஊராட்சி தலைவர் சரமாரி வெட்டிக் கொலை: 20 பேர் கும்பல் வெறிச்செயல்

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (36). ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர். இதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவர் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் 2 முறை போட்டியிட்டு தோல்வியடைந்தவர். தற்போது நடைபெற்ற தேர்தலிலும் 3வது முறையாக போட்டியிட்டு சுபாஷிடம் தோல்வியடைந்தார். இவர்கள் 2 பேருக்கும் முன்விரோதம் காரணமாக பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, இருதரப்பு ஆதரவாளர்களும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில், தாமோதரன் ஆதரவாளர் தங்கவேல் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சுபாஷ் உள்ளிட்ட 16 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து 15 பேரை கைது செய்தனர். மேலும் சுபாஷ் உள்ளிட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஜாமீனில் வெளியில் வந்த சுபாஷ், கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி தலைவரானார். தற்போது, சுபாஷ் அதே பகுதியில் வேறு ஒருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார். நேற்று மாலை அவரது நண்பர் மணிகண்டனுடன் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மணிகண்டன் வேறு வேலையாக வெளியில் சென்றுவிடவே, சுபாஷ் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, தாமோதரன், மணிவண்ணன், பக்கிரி, ராஜதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு சென்று சுபாஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அப்பகுதி மக்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுபாஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்த கடலூர் ஏடிஎஸ்பி பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவர்களை சுபாஷ் உறவினர்கள் முற்றுகையிட்டு கொலையாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

Related Stories: