4 மண்டலங்களில் மட்டும் கொரோனா அதிகரிப்பு ஏன்? விரிவான ஆய்வு நடக்கிறது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை : சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நான்கு மண்டலங்களில் அதற்கான காரணம் குறித்து தெரு வாரியாக விரிவான ஆய்வு மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்த 1000 ரூபாய் கொரோனா நிவாரண தொகையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வழங்கினார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளை தீவிரமான முறையில் கண்காணித்து வருகிறோம். இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 12,709 நபர்களில், 381 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக முதல்வர் அறிவித்தபடி 38,000 சாலையோர வியாபாரிகளில் 14,600 வியாபாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 59,679 மாற்று திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கி உள்ளது. ஒரு வார காலத்தில் அனைவருக்கும் வழங்கப்படும். சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரின் விவரங்களும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மாநகராட்சி சார்பில் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்படும்.

ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா பொது முடக்கத்தை அமல்படுத்துவதன் மூலம் தொற்று பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். இறைச்சி கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் சமீபகாலமாக தொற்று அதிகரித்து வரும் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வீதி வீதியாக சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக குறைந்து வருவதாகவும் இதனை நழுவ விடக் கூடாது என்பதற்காக மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இதனை சாத்தியமாக்க முடியும். முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றாலே பெரிய தவறு என்று மக்கள் மனதில் பதிய வேண்டும், இயல்பான முறையில் தொற்று எண்ணிக்கை குறைவது தான் நமக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: