கோவை வால்பாறையில் கனமழையால் அடிக்கடி நிலச்சரிவு...! வீடுகளில் சகதி நீர் புகுந்ததால் மக்கள் அவதி!!!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தத்து. இதனால், காமராஜ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், சாலையில் கொட்டிய மண் குவியலில் தண்ணீரும் கலந்ததால், 20க்கும் அதிகமான வீடுகளில் சகதி நீர் புகுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, சாலை முழுவதும் சகதியானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், காமராஜ் நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அங்குள்ள மலையை மட்டப்படுத்தி தற்காலிக சாலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சாலையில் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும், பூங்கா அமைக்கும் பணிகளும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.

இதனால், அடிக்கடி அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரிசெய்யவும் மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: