காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சில்லறை விற்பனைக்கு தடை: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

தண்டையார்பேட்டை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லவும், மீன் விற்பனை செய்யவும் அரசு தடைவிதித்தது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி, மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 15ம் தேதி முதல் காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். காசிமேடு துறைமுகத்தில் மீண்டும் மீன் விற்பனை செய்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் என புகார்கள் எழுந்தன.

 இந்நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் காவல் கூடுதல் ஆணையர் அருண், மீன்வளத்துறை இயக்குனர் சமீரன், வடக்கு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 20 மார்க்கெட்கள் இயங்கி வருகின்றன. அனைத்து இடங்களிலும் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சில்லரை விற்பனை செய்தால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், அதற்கு அனுமதி அளிக்க முடியாது. மீன்களை மொத்தமாக வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீன்கள் மொத்த விற்பனை செய்வதற்கு முறையான ஏற்பாடுகள் காவல் துறையினர் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: