கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பதிவு விவகாரம்: கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தில் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி போலீஸ் சீல் வைப்பு

சென்னை: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வேளச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில்வாசன்(49) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில்  தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேந்திரன் நடராஜன் நேற்று முன்தினம்

புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து புதுச்சேரி போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைதொடந்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை புதுச்சேரிக்கு விரைந்து சென்று குற்றவாளியை கைது செய்து நேற்று எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சுரேந்திர நடராஜன் அளித்த தகவலின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.நகர் நியூ போக் சாலையில் உள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கிற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் அலுவலகத்தை மூடி சீல் வைத்தனர்.

Related Stories: