சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் : கார்த்தி சிதம்பரம்

சென்னை : சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அனேகமாக அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் என்றும் ஒரு தகவல் அண்மைகாலமாக காட்டுத் தீயாக பரவி வருகிறது.

அதேநேரம், ‘சசிகலா இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பில்லை’ என்று திட்டவட்டமாக அடித்துச் சொல்கிறார்கள் சில அதிமுக அமைச்சர்கள். தஞ்சையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘‘முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் செம்மையாகக் கொண்டு செல்கிறார்கள்.சசிகலா விரைவில் விடுதலை ஆகப்போகிறார் என்ற தகவல் வதந்தி. யாரும் நம்ப வேண்டாம். எங்களின் ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூருக்கு கார்த்தி சிதம்பரம் இன்று வருகை புரிந்தார்.அங்கு புறவழிச்சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவர் கூறும்போது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் என்று ரத்தின சுருக்கமாக கூறினார். அவரது இந்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

Related Stories: