வாகனங்களை மறித்து உண்டியல் வசூல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடுரோட்டில் வாகனங்களை மறித்து உண்டியல் பணம் வசூலிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என பெரியவர்கள் கூறுவர். குறிப்பாக அம்மன் கோயில், வினாயகர் கோயில் இல்லாத கிராமமே கிடையாது. தற்போது ஆடி முதல் வாரம் இன்று துவங்கிய நிலையில், அம்மன் கோயில்களில், விழாக்களை நடத்தும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமத்தினர், விழாக் குழு ஒன்றை நியமனம் செய்து, ஊர் மக்கள், வியாபாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் நன்கொடை வசூலிக்கின்றனர்.

இதில் திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, மண்ணூர் - அரக்கோணம் சாலை, திருவள்ளூர் - பூந்தமல்லி சாலை, ஆவடி நெடுஞ்சாலை, செங்குன்றம் சாலை ஆகிய நெடுஞ்சாலைகளில் உள்ள சில கிராமத்தினர், அந்த வழியாக வரும் தொழிற்சாலை பஸ்கள், வேன்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து, உண்டியல் ஏந்தி காணிக்கை வசூலிக்கின்றனர். வாகனத்தை நிறுத்த மறுத்தாலோ, பணம் இல்லை என்றாலோ, தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், உண்டியல் வசூல் செய்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சில இடங்களில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. எனவே கோயில் விழா என்ற பெயரில், நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி, உண்டியல் வசூல் நடத்தி, போக்குவரத்துக்கு தடையாக இருப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: