அரியலூரில் ஒரே கடையை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கடைக்கு சென்றவர்களை பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்!!!

அரியலூர்:  அரியலூரில் ஒரே துணிக்கடையில் பணியாற்றிய 20 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 513 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்தோரின் எண்ணிக்கை 53ஆக இருந்தது. இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டு 459 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

 அரியலூர் நகர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் துணிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  மேலும், துணிக்கடைக்கு அருகே பூ வியாபாரம் செய்து வந்த ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைவீதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஒரே துணிக்கடையை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கடைவீதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், துணிக்கடை ஊழியர்கள் தங்கி இருந்த இடங்களையும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் துணிக்கடைக்கு சென்று வந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவுறுத்தியுள்ளார். அரியலூரில் ஒரே நாளில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 535 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: