துணை முதலமைச்சர் பதவியை பறித்த காங்கிரஸ்.. சத்தியத்தைத் தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் பஞ்ச்!!

ஜெய்ப்பூர் : சத்தியத்தைத் தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது என்று சச்சின் பைலட் ட்வீட் செய்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதலமைச்சர் பதவியும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது.

இதனை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரான ரண்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார். சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனாவும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பதவி பறிப்பு நடவடிக்கை தொடர்பாக சச்சின் பைலட் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,சத்தியத்தைத் தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது என்று சச்சின் பைலட் ட்வீட் செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தான் காங்கிரஸ் பிரச்னை பற்றி பரபரக்கப்பட்டு வரும் நிலையில், முதன் முறையாக பொதுத் தளத்தில் வாய் திறந்துள்ளார் பைலட்.

பதவி பறிப்பின் பின்னணி!!

*ராஜஸ்தானில் பெரும்பான்மை பலத்துடன், காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்து வந்தது. அரசைச் சீர்குலைக்க முயற்சி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சச்சின் பைலட்டுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விவகாரத்தால், இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

*தனக்கு 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், அசோக் கெலாட் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது என வெளிப்படையாக அறிவித்தார்.

*அதேசமயம், சச்சின் பைலட்டை சமரசம் செய்ய டெல்லி காங்கிரஸ் தலைமை முயற்சி மேற்கொண்டதாகவும், முதலமைச்சர் பதவிக்கு குறைவான எதற்கும் இறங்கி வர முடியாது என சச்சின் பைலட் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

*நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரும் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெய்ப்பூர் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை.

*எனவே அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*மேலும் ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை நீக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*இதை, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரான ரண்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார்.

Related Stories: