கொரோனா சிகிச்சை முகாமில் இருந்த 61,000க்கும் மேற்பட்டோர் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் பயனடைந்துள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா சிகிச்சை முகாமில் இருந்த 61,000க்கும் மேற்பட்டோர் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும்.

மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிய முறையிலான சில ஆசனங்களும் வழிவகுக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இப்பணிகளில் 200க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இதுவரை 61,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தேவையின் அடிப்படையில் இச்சிகிச்சை முறைகள் மேலும் விரிவுபடுத்தப்படும், என்று கூறியுள்ளார்.

Related Stories: