×

காட்டுப் புலி வழிமறிக்கும் கலங்கி நிக்காதே...

நன்றி குங்குமம் தோழி

இயற்கை எழில் கொஞ்சும் தெங்குமரஹாடா


உலகமே கிராமமாக சுருங்கி நம் விரல் நுனியில் இருக்க, தொலைத்தொடர்பு வசதிக் குறைகளோடு, போக்குவரத்து வசதிகளற்று, ஒரு கிராமமே கேட்பாரற்று ஒதுங்கிக் கிடக்கிறது. இந்த ஆச்சரியம் வேறு எங்குமில்லை. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான தெங்குமரஹாடாதான் அது.

காடு என்றதுமே, நம் எல்லோர் மனதிலும் மரங்கள் அடர்ந்த, மலைகள் சூழ்ந்த... ஆள் அரவமற்ற... பயமும் பீதியுமான... எந்த விலங்கு எங்கிருந்து தாக்குமோ என்ற திகில் கலந்த எதிர்பார்ப்பாகத்தான் இருக்கும். அப்படியான ஓர் அடர்ந்த காட்டில் தினமும் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து, இடையில் வழிமறிக்கும் மாயாற்றைக் கடந்து, மூன்று தலைமுறையாக 1200 குடும்பங்களும் நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களும், தங்கள் வாழ்வாதாரங்களையும், தங்கள் மூதாதையர் வாழ்ந்த மண்ணின் உணர்வுகளையும் இழக்க மனமின்றி, காடும் காடு சார்ந்த வாழ்க்கையுமாய் பல இன்னல்களுக்கு நடுவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேவைகள் எல்லாம் தங்கள் வாழ்வாதாரத்தை இடைமறிக்கும் ஆற்றைக் கடக்க ஒரு பாலம் வேண்டும் என்பது மட்டுமே.

இரவு பகலாய் தூக்கத்தையும், இயற்கையின் தாக்கத்தையும் எதிர்த்து, நாம் உண்ண நமக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களை விளைவித்து தரும் இந்த தெங்குமரஹாடா மக்கள், நகரத்தை விட்டு எங்கோ மிகத் தொலைவில் கரடுமுரடான பாதைகளில் பயணித்து, பயமுறுத்தும் காட்டு விலங்குகளைக் கடந்து, ஆற்றுக்குள் வாகனத்தோடு உள்ளிறங்கித்தான் தங்கள் வாழ்வாதாரத்தையும், உறவுகளையும் அடைய முடியும்.  இயற்கை எழில் கொஞ்சும் வளமான கிராமம் இது. கொட நாட்டில் காட்சிமுனையில் இருந்து பார்த்தால் தெங்குமரஹாடா இந்தியாவின் வரைபடம் போல மிகவும் அழகாகக் காட்சி தரும்.

இந்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்தும் தினமும் காலை மாலை என இரண்டே இரண்டு அரசு பேருந்துகள் மட்டும்தான். அடர்ந்த வனத்துக்குள் பயணிக்கும் இந்தப் பேருந்துகள் தெங்குமரஹாடா கிராமத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு இடையில் கல்லாம்பாளையம் வழியாக ஓடும் மாயாறு குறுக்கிடுவதால் ஆற்றுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தப்பட்டு விடும். ஆற்றைக் கடக்க தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் மட்டுமே பரிசல் மூலமாக மக்கள் கிராமத்துக்குள் நுழைகின்றனர்.

மாயாற்றில் கட்டற்று தண்ணீர் கரைபுரண்டு ஓடினால், கரைக்கு இந்தப் பக்கமே நிற்க வேண்டிய அவல நிலையும் பெரும்பாலும் நிகழ்வது உண்டு. சில நேரங்களில் பரிசலையும் செலுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் மிகமிகக் குறைவாக ஓடினால் முதலைகள் சுற்றும் அந்த ஆற்றுக்குள் இறங்கி நடந்தே கரையேறுகின்றனர். வங்கிப் பணிக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் இம்மக்கள் தினமும் 100 கிலோ மீட்டர் பயணித்து, ஈரோடு மாவட்டமான பவானிசாகர் சென்று வருகின்றனர். அவசரத் தேவை, உடல் நலமின்மை, முதியோர் மருத்துவம், கர்ப்பிணிப் பெண்களின் அவசர நிலை, படிப்பிற்காக வெளியில் சென்று வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு, எதிர்பாராமல் நிகழும் விலங்குகளின் தாக்குதல், பாம்புக் கடி என எல்லாவற்றுக்கும் போக்குவரத்து இன்றி நூற்றாண்டைத் தொட்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் இவர்கள்.

‘‘எங்கள் முன்னோர்கள் விவசாயக் கூலிகளாக இங்கு வந்தார்கள். எங்களுக்கு விவசாயம் தவிர வேறொன்றும் தெரியாது. வெளியில் சென்றாலும் எங்களுக்கு பிழைக்கத் தெரியாது” எனச் சொல்லும் இம்மக்களின் நீண்டநாள் கோரிக்கை வெளியில் சென்றுவர வசதியாக சாதாரணமான மண் பாதை ஒன்றையும், மாயாற்றைக் கடக்க பாலம் ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என்பதே. இங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை எட்டாவது வகுப்பு வரை மட்டுமே இருந்தது. இப்போது தான் பத்தாவது வகுப்புவரை உள்ளது.

அதற்கு மேல் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் வெளியூர்களுக்குச் சென்றுதான் படிக்க வேண்டும். ‘‘பல மாணவர்கள் ஊருக்குள் வரும் இந்த இரண்டு பேருந்துகளை நம்பித்தான் பள்ளிகளுக்கு சென்று வந்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தாலோ அல்லது பேருந்தை அவர்கள் தவறவிட்டுவிட்டாலோ பெரும்பாலும் பெண் குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் பேருந்திற்குள்ளேயே ஆற்றின் கரைக்கு அந்தப் பக்கம் இருப்பார்கள். ஊருக்குள் வரும் பேருந்தை தவறவிட்டுவிட்டால், பேருந்து நிலையத்திலே இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுவதுண்டு. அரசோடு நாங்கள் எவ்வளவோ போராடியும் எங்களுக்கு சாலை வசதியும், போக்குவரத்து வசதியும் கிடைக்காத நிலையில், எங்கள் குழந்தைகள் எல்லாம் இப்போது பள்ளி, கல்லூரி விடுதிகளிலேயே தங்கிப் படிக்கிறார்கள்” என்கின்றனர் ஊர் மக்கள்.

இங்கு பி.எஸ்.என்.எல் அலுவலகம், அரசு அஞ்சலகம், அரசு பட்டுப்பூச்சி வளர்ப்பு நிறுவனம், அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. இதில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எல்லாம் இங்கேயே தங்கியிருந்துதான் பணியாற்றுகின்றனர். இவர்கள் எல்லாம் ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்கிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். ‘‘இவர்களும் எங்களோடு இணைந்து போக்குவரத்து வசதியின்றி கஷ்டப்படுகின்றனர்.

எங்கள் ஊரிலே படித்து, வெளியூர்களில் மேல்படிப்பு முடித்த எங்களில் அடுத்த தலைமுறையினர் வெளிநாடுகளிலும் சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களிலும் பரவலாக பணியில் உள்ளார்கள். அவர்கள் எங்கிருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை தங்கள் மண்ணான தெங்குமரஹாடா வந்து பொங்கலை குடும்பத்தோடு சிறப்பிப்பார்கள். போகவர 100 கிலோ மீட்டரைத் தாண்டி, சாலை வசதியற்ற அடர்ந்த காட்டுக்குள் இத்தனை குடும்பங்களும்  இருக்கிறோம். 80 ஆண்டுகளைக் கடந்து, மூன்று தலைமுறையாக, எங்கள் மூதாதை யர்கள் வளமாக்கிய மண் இது. அந்த உணர்வை நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆகவே, இந்த மண்ணைவிட்டுப் போக மாட்டோம்” என்கின்றனர் அனைவரும்.

தங்கள் மக்களின் பிரச்சனை குறித்து தெங்குமரஹாடாவில் பிறந்து வளர்ந்து அங்கேயே இப்போதும் குடும்பத்துடன் வசிக்கும் பி.எஸ்.என்.எல். லைன் ஊழியரான வரதராஜனிடம் பேசியபோது, ‘‘இங்கு தொலைத் தொடர்பு வசதி மிகமிகக் குறைவு. கைபேசிகளுக்கான டவர் வசதி சுத்தமாக இல்லை. பி.எஸ்.என்.எல் தொடர்பு மட்டும் தான் உள்ளது. 5 அல்லது 6 சேனல்கள் மட்டுமே  இங்கு எடுக்கும். அரசு அலுவலகங்களில் மட்டுமே இணைய வசதி உள்ளது. எனது வேலை தொடர்பாக கல்லம்பாளையம் வரை நான் இரு சக்கர வாகனத்தில்தான் பயணிப்பேன்.

காட்டு வழியாகத்தான் போக வேண்டும். இரு பக்கமும் இருந்த காட்டு மரங்கள் அழிந்து, வேலிக்கருவை மரங்கள் அதிகமாக இங்கு பரவி விட்டது. புலிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. அடிக்கடி புலி, சிறுத்தைகளை வழிகளில் பார்ப்பேன். பலமுறை என்னை யானை துரத்தி இருக்கிறது. காட்டுப் பன்றியும் இங்கு நிறைய உண்டு.

தெங்குமரஹாடாவுக்கு மிக அருகில் உள்ள அல்லிமாயார், கல்லாம்பாளையம் கிராமங்களில் இருளர் இன மக்களும், தெங்கு மரஹாடாவில் படுகர், இருளர், குறும்பர், ஆதிதிராவிடர் மற்றும் கர்நாடகாவில் இருந்து புலம்பெயர்ந்த ஒப்பிலியக் கவுடர் இன மக்கள் என கலந்து வாழ்கின்றனர். அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க நடந்து தெங்கு மரஹாடாதான் வர வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் யானை, புலி, சிறுத்தைகள் நடமாட்டம் காட்டு வழியில் அதிகமாக இருக்கும்.

கரடி, செந்நாய், மான், முதலை, நீர்நாய், பாம்புகள் நிறைய உள்ளன. பெரும்பாலும் எங்கள் மக்களை அடிக்கடி யானை துரத்தும். கொடிய  விலங்குகள் எங்களை தாக்கினால் அவ்வளவுதான் முடிந்தது கதை. அந்தச் சம்பவங்களும் இங்கு அவ்வப்போது நிகழ்வதுண்டு. எங்கள் மூதாதையர், ஒரு காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உணவு தானியம் உற்பத்தி பண்ண அரசிடம் கேட்டு வாங்கி ஆடு, மாடு மேய்ச்சலுக்கு பட்டியாக பயன்படுத்திய இடம் இது. நீலகிரி மாவட்டத்திலே உணவு தானியமான நெல் விளைச்சலுக்கு ஏற்ற நிலம் இங்குதான் உள்ளது. நெல் இங்கு மட்டும்தான் விளையும். இங்கு விளைவிக்கும் நெல் மிகவும் சுவையானதாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

நெல், வாழை, மிளகாய், மஞ்சள், வேர்க்கடலை, ராகி, மக்காச்சோளம் என அனைத்தையும் விளைவித்து ஏற்றி நகரத்துக்கு அனுப்பி வைக்கிறோம். எங்களின் விவசாயம் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த விவசாயம். ரசாயனக் கலப்பு சுத்தமாக இல்லை. மாட்டுச் சாணம், வேப்பந்தழை, மக்கிப்போன செடிகொடிகளையே உரமாக பயன்படுத்துகிறோம். உணவுப் பொருட்களில் பூச்சி தாக்குதல் இருந்தால், எங்கள் நிலத்தில் விளையும் மிளகாய்களையும் வேப்பக்கொழுந்தையும் அரைத்து பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுத்துகிறோம். மாயாறு மற்றும் கூக்கல் துறை ஆறு வழியாக வரும் நீர் எங்கள் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுகிறது.

ஆற்றுத் தண்ணீரில், மூலிகை இலைகள் தானாகவே விழுந்து மக்கிக் கலந்து விவசாயத்தை மேலும் செழிப்பூட்டுகிறது. இரு போகமும் விளையும் நிலமிது. இயற்கை சார்ந்தே நாங்களும் இயங்குவதால், எங்கள் மண்ணில் விளையும் அனைத்து உணவுப் பொருட்களும், மிகமிக ருசியாக, சத்தானதாக இருக்கும். எங்கள் விளைநிலங்களில் காட்டுப் பன்றி களின் தொந்தரவு மிகவும் அதிகமாக இருக்கும். 50, 100 என மொத்தமாக வந்து பன்றிகள் பயிர்களை நாசப்படுத்தும். யானைகளும் இரவு நேரத்தில் கூட்டமாக வரும். இரவெல்லாம் விளக்கு வெளிச்சத்தில், நெருப்பு மூட்டி, யானை மற்றும் காட்டுப் பன்றிகளை விரட்டி பயிர்களை பாதுகாப்போம்.

நாங்கள் விளைவிக்கும் பொருட்களை 50 கிலோ மீட்டர் கடந்து புளியம்பட்டி அல்லது சத்தியமங்கலம் சந்தைகளுக்கு கொண்டு செல்வோம். இவ்வளவு துயரங்களுக்கு நடுவே நாங்கள் விளைவிக்கும் இந்த விலை மதிப்பற்ற உணவுப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. மிகக் குறைவான விலைக்கே இடைத்தரகர்கள் பெற்றுச் செல்கின்றனர். ஒரு காலத்தில் 20 கேன்கள் நிறைய பால் இங்கிருந்து வெளியூர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். எங்களிடம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடை வளமிருந்தது. மாடுகளை காட்டுக்குள் வளர்க்க வனத்துறை அனுமதி மறுத்ததால் எங்களின் கால்நடை வளங்களை இழந்துவிட்டோம்.

இங்கு சாப்பாட்டுக்கு குறையோ பஞ்சமோ எங்களுக்கு இதுவரை வந்ததில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 6 மூட்டை கடலை, மிளகாய் இருக்கும். நெல் குறைந்தது 10 மூட்டைகள் இருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பூமியை விட்டு நாங்கள் எப்படி கிளம்ப முடியும்? உறவினர்கள் நம்மைத் தேடி எளிதில் உள்ளே வர முடியாது. புலிகள் உலவும் காப்புக் காடு எனப்படும் டைகர் ரிசர்வ் பாரஸ்ட் என்பதால் வனத்துறை அலுவலகத்திடம் முறையான அனுமதி பெற்றே உள்ளே வர முடியும். எங்கள் வீடுகளில் பிறப்பு மட்டுமில்லை இறப்புமே மிகவும் கஷ்டமான விசயமாகவே நிகழ்கிறது.

ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகிற காலத்தில் நாங்கள் மிக மிக அவதிப்படுகிறோம். எங்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் மாயாற்றை கடக்க பாலம் வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரை சந்தித்து பல முறை மனு கொடுத்துவிட்டோம். எல்லோரும் வருகிறார்கள், பார்வையிடுகிறார்கள். நாங்களும் தொடர்ந்து மனு கொடுக்கிறோம். எங்களின் வாக்குரிமையையும் அளிக்கிறோம். ஆனால் எங்கள் மக்களின் கோரிக்கைக்கு அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை” என்றார். இவர்கள் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சித் தலைவரில் துவங்கி அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதலமைச்சர் பிரிவுகளுக்கு மனு மூலமாகவும், நேரிலும் பலமுறை எடுத்துச் சொல்லியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

- மகேஸ்வரி
படங்கள்: ஸ்தேவன்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!